கவியரங்கம்: ஊடகத் தமிழ் - இணையத் தமிழ்
தலைமை - கவிஞர் புகாரி, கனடா
செப்டம்பர் 19, 2010, MLKJ நூலகம், சான் ஹுசே
வளைகுடாத் தமிழ் மன்ற நிகழ்ச்சி
கானடா புகாரிகாட்ட,
தமிழினிமை காணடா,
என்று காட்டும்
தமிழ்மன்றைப் பணிகின்றேன்,
தோன்றிடுதே சிறுகவிதை.
லேனா, சொத்தென்று
எமைச் சொன்னார்.
சொத்தில்லை ஐயாநான்
சொத்தைதான் பாடுகிறேன்.
நாமறிந்த தமிழினிலே,
முதன் முதலாய்
சிலம்பிசையும் நன்னடமும்
கேட்பதுவும் பார்ப்பதுவும்,
காவிரிப்பூம் புகாரிலன்றோ?
அதனால்,
இவ்வரங்கை நடத்துதற்கு,
அன்புடன் புகாரிஅன்றித்
தகுதிமிகு தலைவருண்டோ?
ஆணையிட்டாய் தலைவாநான்
அடிஎடுத்து பாடுதற்கு.
நிலாச்சாரல் தண்ணொளியில்
திண்ணயிலே நானிருக்க,
கீற்றாடும் தென்றலிலே
தமிழ்மணத்தின் பூவாசம்,
காட்டுறநீ யாரடியோ?
பூங்கொடியின் பூக்களெல்லாம்
மாலையிலே வாடுமடி.
வாடாத பூக்களடி
உன்னழகைக் கூட்டுதடி.
என்மனதைப் பிடிக்கின்ற
வலைப்பூவாய் மின்னுதடி.
பூவாசம் எனைஇழுக்க
உன்வலையில் நான்விழுந்தேன்.
வலைவிழுந்த நேரத்தில்
நீகுழலால்(YouTube) கட்டிவிட்டு,
காணாத காட்சியெல்லாம்
காட்டுகின்றாய் அக்குழலில்.
மதுரையிலே சங்கத்தில்,
புலவர்போற்ற ஆடியவள்,
இணையத்தில் சங்கமத்தில்
ப்ராஜக்ட் மதுரையிலே,
உலகமெல்லாம் ஆடுகின்றாய்
ஓலையிலே கன்னியடி,
கணினியிலே பூவையடி,
பூச்சூடும் கோதையடி.
இவ்வரங்கில் பாடுதற்கு,
அடிகொடுப்பாய் நல்லபடி.
கணினியில்நான் களைக்கையிலே,
கன்னிஉனைத் தேடுகின்றேன்.
உன்னிதழில் தேன்சுவைத்து,
களிப்பினிலே பாடுகின்றேன்.
இணையத்தில் தோழியடி,
இணைபிரியாத் தோழியடி,
நாற்பதிலே காதலடி!
நாள்முழுதும் மோகமடி!
இணையத்து இணைப்பினிலே
சிறுபிழைகள் நேர்கையிலே,
ஊடல்கொண்டு உன்முகத்தை
மறைப்பதுவும் ஏனடியோ?
ஊடகமே உன்னகமோ?
என்னகத்தின் துரையாளும்
அகத்தினிலே குடியிருக்க,
என்னகத்தில் குடிபுகுந்து
என்னுடனே வருபவளே!
ஊரறிய உன்பேரை,
சொல்லிடவோ? சொல்லடியோ!
மின்னலடி உன்னடியோ?
ஊடகத்தின் தமிழடியோ!
இதயத்தின் தமிழடியோ!
இணையத்தின் தமிழடியோ!
- டில்லி துரை மின்னல் ஆறுமுகம்